குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சந்திப்பு!
தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரின் பதவிக்காலம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. இதனையொட்டி, பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக் குழு டெல்லியில் கூடி, தேர்தல் ஆணையராக இருந்த ஞானேஷ் குமாரை தலைமை தேர்தல் ஆணையராக தேர்வு செய்தது. முன்னதாக, இந்தக் குழு கூட்டத்தில் பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஞானேஷ் குமாரின் நியமனத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : “டெல்லியின் வளர்ச்சிக்காக ரேகா குப்தா முழுவீச்சில் பாடுபடுவார்” – பிரதமர் மோடி நம்பிக்கை!
தேர்வுக் குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், உத்தரவுக்கு பிறகு முடிவு எடுக்கலாம் என ராகுல் காந்தி கூறியதாகத் தெரிகிறது. இந்த சூழலில், ஞானேஷ் குமாரை தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார், நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஞானேஷ் குமார் இந்த பதவியில் இருப்பார். இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்றுள்ள ஞானேஷ்குமார் டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்த புகைப்படம் ஒன்றை குடியரசுத் தலைவர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.