சத்தீஸ்கர் | முதல் முறையாக 17 கிராமங்களுக்கு மின்சார வசதி - பட்டாசு வெடித்து கொண்டாடிய பொதுமக்கள்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மொஹ்லா-மன்பூர்-அம்பாகர்- சௌகி மாவட்டத்தில் அடர்ந்த காடுகள் சூழ அமைந்திருக்கும் பதினேழு கிராமங்களுக்கு முதல் முறையாக முக்கிய மந்திரி மஜ்ரதோலா வித்யுதிகரன் யோஜனா திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அம்மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், “மலைகள் மற்றும் அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட இந்தப் பகுதிகளை நக்சலைட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அணுகுவது மின் இணைப்பு மூலம் மின்சாரம் வழங்குவது சவாலாக இருந்தது. இருப்பினும் மின்சாரத் துறையின் கடின உழைப்பால் இது சாத்தியமானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 3 கோடி செலவில் வழங்கப்பட்டுள்ள இந்த மின்சார வசதியால் அங்குள்ள 540 குடும்பங்கள் பயனடைய உள்ளனர். இதுவரை 265 குடும்பங்களுக்கு மட்டுமே மின் இணைப்பு வழங்கியுள்ள நிலையில், மீதமுள்ள குடும்பத்தினருக்கு மின் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
பல ஆண்டுகளாக கிடைக்காத மின்சார வசதி தற்பொது அந்த கிராமங்களுக்கு கிடைத்துள்ள நிலையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.