சத்தீஷ்கர் | பாதுகாப்பு படையினரின் என்கவுன்ட்டரில் 31 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!
சத்தீஷ்கரில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேடுதல் நடவடிக்கையின் போது அவ்வப்போது பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெறும்.
இந்த சூழலில், சத்தீஷ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் இந்திராவதி தேசிய பூங்காவில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகளை தேடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் 31 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். முதலில் 12 நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், 2 பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, கடந்த வாரம் இம்மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரில் 8 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.