‘‘ #ChhatrapatiShivajiStatue உடைந்த இடத்தில் மிகப் பெரிய சிலை நிறுவப்படும்!” - மகாராஷ்டிர அரசு உறுதி!
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்த அதே இடத்தில் மிகப் பெரிய சிலையை மாநில அரசு நிறுவும் என மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவீஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சிந்துதுர்க் மாவட்டம் மால்வானில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி கடற்படை தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி சிலையை திறந்து வைத்தார். இந்த 35 அடி உயரமுள்ள சிவாஜி சிலை நேற்று (ஆக. 26) இடிந்து விழுந்தது. கடந்த 3 நாள்களாக அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், சிலை உடைந்ததற்கான காரணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்து, சேதம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்த விவகாரத்தில் பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
இந்த சம்பவம் குறித்து அந்த மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பேசும்போது, சிலை இடிந்து விழுந்ததற்கான சரியான காரணத்தை கண்டுபிடிப்பதாகவும் அவர் உறுதியளித்தார். அதே இடத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலையை மீண்டும் நிறுவ அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.
சிலை உடைந்து விழுந்த சம்பவத்தில் சிலையை கட்டிய ஒப்பந்ததாரர் ஜெய்தீப் ஆப்தே மற்றும் கட்டமைப்பு ஆலோசகர் சேத்தன் பாட்டீல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலை உடைந்தது குறித்து பேசிய மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவீஸ், ''சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது சோகமான சம்பவம். இதில் அரசியல் விளையாட்டு வேண்டாம். கடற்படையின் உதவியுடன் இதே இடத்தில் புதிய சிலையை நாங்கள் அமைப்போம்'' என்றார். மேலும் இதுகுறித்து பேசிய அம்மாநில அமைச்சர் தீபக் கேசர்கர் இதே இடத்தில் 100 அடி உயர சிலை அமைக்கும் முயற்சிகளை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.