செஸ் போட்டி : சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து !
நெதர்லாந்து நாட்டின் விஜ்க் ஆன் ஜீயில் 87வது டாட்டா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி நடைபெற்றது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் 12 சுற்றுகளின் முடிவில் குகேஷ், பிரக்ஞானந்தா தலா 8½ புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தனர்.
இதனையடுத்து நடைபெற்ற 13-வது மற்றும் கடைசி சுற்றில் குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா இருவரும் தங்களது ஆட்டங்களில் தோல்வியடைந்தனர். குகேஷ் சக நாட்டவரான அர்ஜுன் எரிகைசிக்கு எதிராகவும், பிரக்ஞானந்தா ஜெர்மனியின் வின்சென்ட் கீமருக்கு எதிராகவும் தோல்வியடைந்தனர்.
இதனால் மீண்டும் குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா சம புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தனர். இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. பரபரப்பான டை பிரேக்கர் சுற்றில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா அசத்தலாக வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் டாடா ஸ்டீல்ஸ் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "2025-ன் சாம்பியனாக உருவெடுத்த பிரக்ஞானந்தா வெற்றியானது அர்ப்பணிப்பு, கடின உழைப்புக்கு சான்றாக உள்ளது. இத்தகைய மதிப்புமிக்க நிகழ்வில் பெற்ற வெற்றி அவருடைய திறமை மற்றும் உறுதிப்பாட்டின் உண்மையான பிரதிபலிப்பாகும்.
பிரக்ஞானந்தா உடனான போட்டியில் சிறப்பாக விளையாடிய குகேஷுக்கும் வாழ்த்துகள். இருவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் எலைட் திட்ட வீரர்களாக இருப்பதில் தமிழ்நாடு பெருமை கொள்கிறது. அவர்களின் வெற்றியால் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மேலும் அவர்களின் வாழ்க்கையில் பல வெற்றிகளை எதிர்பார்க்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.