#ChenniMetro 2-ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.63,246 கோடி நிதி வழங்கியதா? தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம்!
சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு ரூ63,246 கோடி நிதி அளித்துள்ளதாக பரவும் செய்தி தவறானது தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.
அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மெட்ரோ திட்டத்திற்கு நிதி கோரியிருந்தார். இந்த சூழலில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து, சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அதே நேரத்தில் மத்திய அரசு சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.63,246 கோடி நிதி வழங்கியுள்ளதாக தகவல் பரவியது. இந்த நிலையில், சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு ரூ63,246 கோடி நிதி அளித்துள்ளதாக பொய்யான தகவல் பரப்பப்படுவதாக தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளதாவது,
"சென்னை மெட்ரோ திட்டம் 2ம் கட்டத்திற்கு ரூ.63,246 கோடி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இது தவறான தகவல். சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளுக்காக மத்திய அரசு தரப்பில் ரூ.7425 கோடி, தமிழ்நாடு அரசு தரப்பில் ரூ.22,228 கோடியும், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மூலம் மாநில அரசின் உத்திரவாதத்தில் கடனாக ரூ.33,593 கோடியும் பெறப்படும். தவறான தகவலை பரப்பாதீர்."
இவ்வாறு தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.