சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை! - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று (நவ.30) இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் திங்கள்கிழமை உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து செவ்வாய்க்கிழமை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக் கடலில் நவ.30-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். மேலும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு, அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு இலங்கை, அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவாரூர், உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் அறிவித்துள்ளது.