சென்னையில் இயல்பை விட அதிகமான மழை பதிவு..!
சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 48% அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி தொடங்கியது. இதனிடையே அண்மையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழைநீர் அதிகளவில் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தது. இதையடுத்து, தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் தமிழ்நாடு அரசும், மாநகராட்சி நிர்வாகமும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : ஆருத்ரா மோசடி வழக்கு – தலைமறைவாக இருந்த ஆர்.கே.சுரேஷ் சென்னை திரும்பினார்!
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டது. மேலும், தொடர் விடுமுறைக்கு பிறகு நாளை (டிச.11) பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.
இந்நிலையில், சென்னையில், வழக்கத்தை விட 48 சதவீதம் அதிகமான மழை பதிவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக அக்.1 முதல் இன்று (டிச.10) வரை இயல்பாக 726.7 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில், 1079 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.