#ChennaiRains | முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!
சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். எங்கெங்கு எவ்வளவு மழை பெய்தது? பாதிப்புகளை சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி அவர் ஆய்வு செய்தார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும் எனவும், தொடர்ந்து வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (அக். 17) வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (அக். 14) நள்ளிரவு கனமழை பெய்தது.
இந்நிலையில், மழை தொடர்பாக முன்னேற்பாடுகளை கண்காணிப்பதற்காக பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், ராயப்பேட்டை ஜானி ஜான் கான் சாலை, ஜி.பி.சாலை உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
நள்ளிரவில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பருவக்கால மழையின் போது தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய மழைக்கால அவசர பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டேன். கனமழை பல்வேறு பகுதிகளில் பெய்திருந்தாலும் இது தொடர்பாக பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு உள்ளேன். மேலும் பல இடங்களில் நீர் வற்றிவிட்டது. இருப்பினும் இதைவிட அதிக மழை வந்தாலும் மழை நீரை அகற்றுவதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து திட்டமிட்டுள்ளோம்.
குறிப்பாக பள்ளிக்கரணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர் வழித்தடங்கள் செல்லக் கூடிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். இந்த ஆய்வு தொடர்பாக பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்களின் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன். மேலும் கடந்த முறை மழை வெள்ளத்தால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகள் இந்த முறை ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, இன்று (அக். 15) காலை சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் எங்கெங்கு எவ்வளவு மழை பெய்தது? பாதிப்புகளை சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி ஆய்வு செய்தார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.