அம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர்... களத்தில் இறங்கிய #ChennaiCorporation!
சென்னையில் உள்ள 388 அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்த நிலையில், உணவகங்களை மேம்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்றது. அப்போது 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திட்டங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது “அம்மா உணவகம்”. அதிமுக ஆட்சியிலும், கொரோனா, புயல், வெள்ளம் காலகட்டத்திலும் அம்மா உணவகங்கள் பொதுமக்களுக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தன. பொது மக்களிடம் வரவேற்பு அதிகரித்ததால் 2016ம் ஆண்டு வார்டுக்கு இரண்டு வீதம், 407 உணவகங்களாக அதிகரிக்கப்பட்டன.
இதனிடையே 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக்குப் பின் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். இந்த சூழலில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், முன்னதாக செயல்பட்டு வந்த அம்மா உணவகம் வழக்கம் போல இயங்குமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த 407 உணவகங்களில், 16 உணவகங்கள் நீதிமன்ற வழக்கு, மெட்ரோ ரயில் பணி உள்ளிட்ட காரணங்களால் மூடப்பட்டன. தற்போது, 391 உணவகங்கள் கடந்த 11 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில், இட்லி ஒரு ரூபாய், பொங்கல், சாம்பார், லெமன், கருவேப்பிலை சாதம், தயிர் சாதம் 5 ரூபாய், 2 சப்பாத்தி 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
குறைந்த விலையில் கிடைப்பதால், கூலி தொழிலாளர்களும், ஏழை மக்களும் பெரிதும் பயனடைகின்றனர். இதற்கிடையே, சென்னையில் உள்ள 388 அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், சென்னை மாநகராட்சி நிர்வாகம் உணவகங்களை மேம்படுத்த டெண்டர் கோரியுள்ளது.