For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#ChennaiAirShow | "அனைத்து வசதிகளும் அரசால் செய்து தரப்பட்டன" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

07:00 AM Oct 07, 2024 IST | Web Editor
 chennaiairshow    அனைத்து வசதிகளும் அரசால் செய்து தரப்பட்டன    அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம்
Advertisement

சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் அனைத்து வசதிகளும் தமிழ்நாடு அரசால் செய்து தரப்பட்டன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

Advertisement

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் குவிந்தனர். இதனால் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிகழ்ச்சியை பார்க்க சென்ற 5 பேர் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்றவர்களுக்கு குடிநீர், உணவு, கழிப்பிடம், போக்குவரத்து உள்பட அடிப்படை வசதிகள் போதிய அளவில் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். கடும் வெயிலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே, விமான சாகச நிகழ்ச்சிக்கு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விமான சாகசத்துக்கு நிர்வாக ரீதியில் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது :

"சென்னையில் இந்திய விமானப் படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்திடத் தமிழ்நாடு அரசின் நிர்வாகரீதியிலான முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை முறையாகத் திட்டமிட்டு நடத்துவதற்காகத் தலைமைச் செயலாளர் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுத் துறை அலுவலர்களுடன் ஒருமுறையும் பின்னர் துறை அளவில் பலமுறையும் நடத்தப்பட்டன.

image

இந்த ஆலோசனைக் கூட்டங்களில் விமானப் படை அதிகாரிகள் கோரிய அனைத்தும் கவனத்தில் கொண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மாநில அரசின் சார்பாக இரண்டு சுகாதாரக் குழுக்கள், போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டது. இது மட்டுமின்றி இந்திய ராணுவத்தின் சார்பாகவும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இது தவிர அவசர மருத்துவ உதவிக்காக 40 ஆம்புலன்சுகளும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. போதுமான அளவு பாராமெடிக்கல் குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தன.

இதையும் படியுங்கள் : நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு | #Tenkasi அருகே சோகம்…

ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 100 படுக்கைகளும் 65 மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மூலமாக மெரினா கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள் மற்றும் குடிநீர் வழங்கலுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

அதிகளவில் பொதுமக்கள் வரும் வாய்ப்பு உள்ளதைக் கருத்தில்கொண்டு 7500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் நேற்று நடைபெற்ற இந்திய விமானப் படையின் நிகழ்ச்சிக்கு அவர்கள் கோரியதற்கு மேலாகவே அனைத்து வசதிகளும் ஏற்பாடுகளும் தமிழ்நாடு அரசால் செய்து தரப்பட்டன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்"

இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

Tags :
Advertisement