ஐபிஎல் 2025ல் முதன்முறையாக 200 ரன்களுக்கு மேல் குவித்த சென்னை - டேபிள் டாப்பரை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 67வது போட்டி இன்று(மே.25) நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி, சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியை எதிர்கொண்டது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்ஸை தொடங்கிய சென்னை அணியில், அதிகபட்சமாக பிரெவிஸ் 57 ரன்களும், டெவோன் கான்வே 52 ரன்களும், உர்வில் படேல் 37 ரன்களும், ஆயுஷ் மத்ரே 34 ரன்களும் அடித்தனர். இதன் மூலம் சென்னை அணி 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்டை இழந்து, இந்த சீசனில் முதன்முறையாக 200 ரன்களுக்கு மேல் குவித்தது.
இதையடுத்து 231 என்ற இலக்கை நோக்கி குஜராத் அணி பேட்டிங் செய்தது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 41 ரன்களும், அர்ஷத் கான் 20 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இறுதியில் 18.3 ஓவர்களில் டேபிள் டாப்பரான குஜராத் அணி ஆல் அவுட்டானது. இதன் மூலம் சென்னை அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி அசத்தியது. சென்னை அணி சார்பில் அன்ஷுல் காம்போஜ் மற்றும் நூர் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரவீந்திர ஜடேஜா தனது பங்கிற்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.