#Tiruvottiyur தனியார் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு | 6 மாணவிகளுக்கு மயக்கம்! - பள்ளி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!
திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு ஏற்பட்ட நிலையில் 6 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 25 ஆம் தேதி வாயு கசிவு ஏற்பட்டு மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இன்று வாயுக்கசிவு ஏற்பட்ட அதே பள்ளியில் மீண்டும் ஆறு மாணவிகள் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து உடனடியாக பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை அவசரமாக வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து, பெற்றோர்கள் திடீரென பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாய்வு கசிவு எப்படி ஏற்பட்டது என்று கேள்வி எழுப்பி, பிள்ளைகளுக்கு பாதுகாப்பு உள்ளதா என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் பெற்றோர்களிடம் சமாதானம் பேசினர்.
மாணவர்கள் அவசரகதியாக வெளியேறிய போது சிலர் தடுக்கி விழுந்து மயக்கமடைந்துள்ளனர். மொத்தமாக ஆறு பேர் மயக்கம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்த வாயுக்கசிவு ஏற்பட்ட சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியில் வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் பள்ளியானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : வெற்றிமாறனின் #ViduthalaiPart2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
"பள்ளி திறப்பதற்கு முன்பு அரசு அதிகாரிகள் மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். பள்ளியில் எந்த பிரச்னையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே பள்ளி திறக்கப்படும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நகராட்சி, சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டு உத்தரவு பிறப்பிக்கும் வரை பள்ளி திறக்கப்பட மாட்டாது"
இவ்வாறு பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.