சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 213 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்தது.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, சிஎஸ்கே முதலில் பேட் செய்தது. கடந்த 2 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ள சிஎஸ்கே, சன்ரைசர்ஸுக்கு எதிரான இன்றையப் போட்டியில் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்போடு களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ரகானேவும், சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட்டும் களம் இறங்கினர். இதில் ரகானே 9 ரன்களில் பெவிலியன் திரும்ப, ருதுராஜ் நிலைத்து நின்று பொறுப்புடன் அடித்து ஆடினார். இவருடன் இணைந்த டிரயல் மிட்சல் சிறந்த பாட்னர்ஷிப்பை கொடுத்தார். 32 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 52 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார்.
இதனை அடுத்து ஷிவம் துபே களம் இறங்க ருதுராஜ் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 54 பந்துகளை சந்தித்த ருதுராஜ் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சருடன் 98 ரன்கள் விளாசிய நிலையில் அவுட் ஆனார். இதனை அடுத்து கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையில் டோனி களம் இறங்கினார். அவர் வந்த வேகத்தில் பவுண்டரி அடித்தார். இதனை அடுத்து ஷிவம் தூபே சிக்ஸ் பறக்கவிட்டார். இறுதியாக ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்சர்களுடன் ஷிவம் துபே 20 பந்துகளுக்கு 39 ரன்கள் சேர்த்திருந்தார். இறுதியாக ஷிவம் துபேவும், டோனியும் களத்தில் இருக்க 20 ஓவர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 212 ரன்கள் குவித்தது.
இதனை அடுத்து 213 ரன்கள் இலக்குடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களம் இறங்கியுள்ளது.