அதிரடி காட்டிய சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 207 ரன்கள் இலக்கு!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் களமிறங்கி பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 206 ரன்களை குவித்தது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 29-வது லீக் ஆட்டம் இன்று (ஏப். 14) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அஜிங்க்யா ரஹானே களமிறங்கினர். ரஹானே 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின், களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து, கேப்டன் ருதுராஜ் மற்றும் ஷிவம் துபே இருவரும் களத்தில் இருந்தனர். ருதுராஜ் கெய்க்வாட் 40 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டேரில் மிட்செல் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, இறுதி ஓவரில் எம்.எஸ்.தோனி களமிறங்கினார். முதல் 3 பந்துகளில் சிக்சர்கள் விளாசி அதிரடி காட்டினார்.
இதையும் படியுங்கள் : “குழந்தைகளை புறக்கணித்தால் தேர்தலில் புறக்கணிப்போம்...” - பாஜகவை கண்டித்த தேவநேயன் அரசு!
இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு சிஎஸ்கே அணி 206 ரன்கள் குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கி பேட்டிங் செய்கிறது.