அதிரடி காட்டிய ருதுராஜ் - 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!
கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தனது 3வது வெற்றியை சிஎஸ்கே அணி பதிவு செய்தது.
கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய ஐபிஎல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில், இதுவரை 21 லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இதையடுத்து 22வது போட்டியில் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேற்று (ஏப். 8) மோதின. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 18 முறையும், கொல்கத்தா அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாத கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. அனுகுல் 3 ரன்களுடனும், வைபவ் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர். சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா மற்றும் துஸார் தேஷபாண்டே தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜா இரண்டு அற்புதமான கேட்சுகளை பிடித்து அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரவீந்திர ஜடேஜாவின் பிடித்த ஒட்டுமொத்த கேட்ச்சுகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 100 கேட்ச்களை பிடித்த இரண்டாவது சென்னை வீரர், ஒட்டுமொத்த அளவில் 4வது இந்திய வீரர் என்ற சிறப்பை ரவீந்திர ஜடேஜா பெற்றார்.
அடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், 17.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அதிகபட்சமாக 67 ரன்கள் (9 பவுண்டரி) விளாசினார். மிட்சல் 25 ரன்களும், சிவம் துபே 28 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா சார்பில் வைபவ் அரோரா 2 விக்கெட், சுனில் நரைன் 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதன்மூலம் நடப்பு சீசனில் கொல்கத்தா அணி தனது முதல் தோல்வியை சந்தித்தது. மேலும், இதுவரை 5 போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.