தொடர் தோல்வியை தழுவும் சென்னை... ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த டெல்லி அணி!
சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஐபில் 2025 தொடரின் 17வது போட்டி சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்கை தேர்வு செய்து, 20 ஓவர்கள் முடிவில் 183 ரன்கள் குவித்தது.
டெல்லி தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 77 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் கலீல் அஹமது 2 விக்கெட்டுகளும், ஜடேஜா, நூர் அஹமது, மதீஷா பத்தீரனா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 184 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. டெல்லி அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. டெல்லியின் வெற்றிக்கு அந்த அணியின் ஃபீல்டிங்கு முக்கிய பங்காற்றியது.
இதன்மூலம் இதுவரை விளையாடி உள்ள 3 போட்டிகளிலும் டெல்லி அணி வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சென்னை தொடர் தோல்வியை தழுவி வருகிறது. கடந்த 2019 முதல் சென்னை அணி 180 ரன்களுக்கு மேல் எடுக்கும் எதிரணிகளின் ஸ்கோரை சேஸ் செய்ய முடியாமல் பயணித்து வருகிறது. இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் பெரும் சோகத்திலும், அதிர்ச்சியிலும் உள்ளனர்.