#Chennai | "என் பெயரை கூகுளில் தேடுங்க.." - தள்ளுவண்டி கடைநடத்தும் பிச்எடி மாணவரால் வியந்த அமெரிக்கர்!
சென்னையில் பிஎச்டி படித்தபடியே இளைஞர் ஒருவர் தள்ளுவண்டியில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் 65 சாப்பிட்ட அமெரிக்கர் ஒருவரை அந்த இளைஞர் வியக்க வைத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாட்டில் இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் அதேவேளையில் கடந்த 10 ஆண்டுகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளன. அதேவேளையில், ஸ்டார்ட்அப் தொடங்க முடியாத பலரும் தங்களுக்கு தெரிந்த தொழில்களை சிறிய அளவில் செய்ய தொடங்கியுள்ளனர். அந்த வகையில் பலரும் தாங்கள் படித்த படிப்புக்கு வேலை இல்லாத காரணத்தால் டீக்கடை, பானிப்பூரி, ஹோட்டல், துரித உணவகம் தொடங்கி நடத்தி வருகின்றனர்.
எம்பிஏ படித்தவர் டீக்கடை வைத்திருப்பதாகவும், பிடெக் படித்தவர் பானிபூரி கடை நடத்துவதாகவும் கூறிய வீடியோக்கள் இணையதளத்தில் அதிகமாக பரவி பாராட்டுகளை குவித்தது. இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது. அதாவது சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் பயோ டெக்னாலஜியில் பிஎச்டி படித்து கொண்டே தள்ளுவண்டியில் துரித உணவகம் (Fast Food) நடத்தி வரும் வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் சுற்றுலா வந்த, அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டோபர் லீவிஸ் சென்னையில் பல இடங்களை சுற்றி பார்த்து வீடியோ பதிவிட்டு வந்தார். தான் Vlogger என்பதால் தான் செல்லும் இடம் மற்றும் சந்திக்கும் நபர்களை வீடியோவாக பதிவு செய்து அதனை யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கிறிஸ்டோபர் லீவிஸ் சென்னையில் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார்.
வீடியோவில் கிறிஸ்டோபர் லீவிஸ் தள்ளுவண்டியில் செயல்படும் துரித உணவகத்துக்கு செல்கிறார். அங்கு இளைஞர் நிற்கிறார். அவரிடம் கிறிஸ்டோபர் லீவிஸ், ‛‛ஹாய் ப்ரோ, எப்படி இருக்கிறீர்கள். சிக்கன் 65 ஒரு பிளேட் எவ்வளவு?'' என கேட்கிறார். அதற்கு அந்த இளைஞர், ‛‛நான் நன்றாக இருக்கிறேன். 100 கிராம் சிக்கன் ரூ.50'' என பதிலளிக்கிறார். இதையடுத்து கிறிஸ்டோபர் லீவிஸ், ‛‛எனக்கு 100 கிராம் சிக்கன் தாருங்கள் ப்ரதர். உங்களின் கடையை கூகுள் மேப் மூலம் அறிந்து கொண்டு வந்தேன்'' எனக்கூறினார்.
தொடர்ந்து அந்த இளைஞரிடம் பேசியபோது தான் அவரது கல்வி தகுதி பற்றி அறிந்து கிறிஸ்டோபர் லீவிஸ் மகிழ்ச்சியடைந்தார். அந்த இளைஞர், ‛‛நான் இந்த வேலையுடன் பயோ டெக்னாலஜி பிரிவில் பிஎச்டி படித்து வருகிறேன். கூகுளில் என்னை பற்றி தேடிப்பாருங்கள்'' என கூறுகிறார். அப்போது குறுக்கிட்ட கிறிஸ்டோபர் லீவிஸ்,‛‛கூகுளில் தேடினால் உங்களின் கடை கிடைக்கும் அப்படித்தானே?'' என்கிறார். அதனை கேட்டு சிரித்த அந்த இளைஞர், ‛‛இல்லை.. இல்லை.. கூகுளில் தேடினால் எனது ஆராய்ச்சி தொடர்பான ஆர்ட்டிக்கிள் கிடைக்கும்'' என்று கூறுகிறார்.
அதனை கேட்டு வியந்த கிறிஸ்டோபர் லீவிஸ் ‛‛ஓ.. சூப்பர்'' எனக்கூறி ஆர்ட்டிக்கிளை கூகுளில் தேட சொல்கிறார். இதையடுத்து அந்த இளைஞர், ‛‛Tarul Rayan SRM University" என டைப் செய்து காண்பிக்க அவரது பிஎச்டி ஆராய்ச்சி தொடர்பான ஆர்ட்டிக்கிள் அதில் வருகிறது. அதனை பார்த்து கிறிஸ்டோபர் லீவிஸ் வியப்படைந்தார். பிறகு அவர் சாப்பிட்டதை தாண்டி அந்த இளைஞருக்கு கூடுதலாக பணத்தை கொடுத்துவிட்டு வாழ்த்திவிட்டு சென்றார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. இதனை பார்க்கும் பலரும் அந்த இளைஞரை பாராட்டி வருகின்றனர்.