சென்னையில் ரூ. 27 கோடி மதிப்பிலான 2.7 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - போலீஸ் அதிரடி!
சென்னைக்கு போதைப்பொருளை விமானத்தில் கடத்தி வந்த இந்தோனேஷியாவைச் சேர்ந்தவரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்து வந்த பயணிகளின் உடமைகளை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் சோதனை நடத்தினர். அப்போது இந்தோனேஷியாவில் இருந்து வந்த பயணி ஒருவரின் உடமையை சோதனை செய்த போது கோகைன் போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையும் படியுங்கள் : சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாதம் | எடப்பாடி பழனிசாமி vs நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு!
இதையடுத்து, ஆய்வில் 2.7 கிலோவுடைய கோகைன் போதைப்பொருள் மறைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது. மேலும், அதன் மதிப்பு ரூ. 27 கோடி என்பது தெரிய வந்தது. அதனை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்தனர். கோகைன் போதைப்பொருளை கடத்தி வந்த இந்தோனேஷியாவைச் சேர்ந்தவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
கைதானவர் பயணித்த விமானம் இந்தோனேசியாவில் இருந்து லாவோஸ் சென்று அங்கிருந்து சிங்கப்பூர் வழியாக சென்னை வந்ததாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தலுக்குப் பெயர்போன லாவோஸில் இருந்து போதைப்பொருளை கைதானவர் கடத்தி வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைதானவர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவரா என்றும், யாரிடம் போதைப்பொருள் விற்பனை செய்ய இங்கு கொண்டு வந்தார்? என பல்வேறு கோணங்களில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.