Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புத்தாண்டு அன்று பட்டாசு வெடிக்க தடை... சென்னை காவல்துறை அறிவிப்பு!

03:15 PM Dec 30, 2024 IST | Web Editor
Advertisement

புத்தாண்டு அன்று சென்னையில் பட்டாசு வெடிக்க தடை விதித்து சென்னை காவல்துறை அறித்துள்ளது.

Advertisement

நாடு முழுவதும் நாளை இரவு புத்தாண்டை கோலாகலமாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்தவொரு விபத்தும் ஏற்பாடாமல் இருப்பதை உறுதி செய்ய மாநில அரசும் போலீசாரும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், 2025ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 19,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க சென்னை காவல் துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் காவல் துறையினருக்கு உதவியாக, சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதில் முக்கியமாக கடற்கரை, வழிபாட்டு தலங்கள், சாலைகள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 31.12.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று இரவு 09.00 மணியிலிருந்து முக்கியமான இடங்களில் காவல்துறை சார்பில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. சென்னை, மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, புனித தோமையர்மலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர் மற்றும் கோயம்பேடு ஆகிய இடங்களில் மொத்தம் 425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இது மட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, மற்றும் GST ரோடு போன்ற பகுதிகளில் இருசக்கர வாகன பந்தயம் (Bike Race) தடுப்பு நடவடிக்கையாக 30 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சென்னையில் உள்ள 100க்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள், தேவாலயங்கள், இதர வழிபாட்டுதலங்கள், பொது இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, 31.12.2024 மாலை முதல் 01.01.2025 வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல் ஆளிநர்கள், குதிரைப்படைகள் மற்றும் (All Terrain Vehicle) எனப்படும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மணல் பகுதியிலும் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.

சில இடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால் தகுந்த மாற்றுவழி ஏற்பாடுகளை பயன்படுத்திட வேண்டும். கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல் துறை, கடலோர பாதுகாப்பு குழுமம், மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் (Anti Drowning Unit) இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையாக, எச்சரிக்கை பதாகைகள் பொருத்தப்பட்டு கடலில் யாரும் மூழ்கிடாமல் உயிரிழப்பை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக குதிரைப்படைகள் கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும். மேலும், அவசர மருத்துவ உதவிக்கு. முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். சரக காவல் அதிகாரிகள் மேற்பார்வையில் குற்றத் தடுப்பு நடவடிக்கை மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுத்தல் ஆகிய பணிகளுக்கு, தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும்.

Mobile Surveillance Team எனப்படும் குழுக்கள் அமைக்கப்பட்டு Tata Ace போன்ற வாகனங்களில் PA.System, Filckering Light போன்றவை பொருத்தியும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வாகனங்கள் அதிகம் சேரும் இடங்களில் உபயோகிக்கப்படும். பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் காவல்துறை மற்றும் இதர துறைகளில் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்திட வேண்டும். மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

சென்னை காவல் துறை, பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுகளும் இல்லாமல் அனைத்து நிகழ்வுகளை நடத்திட, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து சென்னை பெருநகரில் புத்தாண்டை சிறப்பாகவும், மற்றவர்களுக்கு சிரமமின்றியும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. மேலும், காவல் துறையின் அறிவுரைகளை கடைபிடித்து புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுமாறு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள், காவல் துறையினருடன் ஒத்துழைப்பு நல்கி, 2025ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டினை இனிதாக வரவேற்றிட "இனிய புத்தாண்டு வாழ்த்துகளுடன்" கேட்டுக் கொண்டனர்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ChennaiPoliceRestrictionsrules
Advertisement
Next Article