சென்னை | தொடர் விடுமுறையால் சாலைகளுக்கு ஓய்வு!
பொங்கல் விழாவை முன்னிட்டு தொடர் விடுமுறைக்காக சென்னையிலிருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்க்கு திரும்பியதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
விடியல் தொடங்கி, அந்தி சாய்ந்தும் சென்னையில் அனைத்து சாலைகளும் எப்போதுமே பரபரப்பாக காட்சி அளிக்கும். நிற்க நேரமில்லாமல் ஒரு நாளே மிக வேகமாக ஓடிவிடும். அப்படி பல டன் சுமைகளை தினமும் தாங்கும் சென்னை சாலைக்கு இன்று சற்று ஓய்வு கிடைத்துள்ளது.
குறிப்பாக வேலை நாட்களில் அலுவலகங்களுக்கு செல்வோர், பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளுக்கு செல்வோர் என சென்னையின் அனைத்து சாலைகளும் எப்போதுமே பரபரப்பாக காட்சியளிக்கும். சென்னை மட்டுமில்லாமல் சென்னையின் புறநகர் பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களின் வேலைகளுக்காக சென்னைக்கு படையெடுப்பார்கள்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையின் பிரதான சாலைகள் அனைத்துமே பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்கள் இரைச்சலின்றி காணப்படுகிறது. காலை முதல் நள்ளிரவு வரை பரபரப்பாக இருக்கும் ஜி.எஸ்.டி.சாலை, அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உட்பட பல முக்கிய சாலைகளிலும் வாகன நடமாட்டம் முற்றிலுமாக குறைந்துள்ளது.
காலை முதல் மாலை வரை எப்போதும் தலை சாய்த்தபடியே பேருந்துகள் செல்லும். தற்போது பொதுமக்கள் வருகை இல்லாமல் குறைந்த அளவே பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். மேலும் பொதுமக்கள் அதிகம் வரும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதுவரை அரசு பேருந்துகள், ரயில்கள், ஆம்னி பேருந்துகள், விமானம், கார்கள் மற்றும் இருசக்கர வாகனத்தின் மூலம் சென்னையை விட்டு 40 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.