புத்தக கண்காட்சியில் ‘சென்னை வாசிக்கிறது’ நிகழ்வு ஜன.12 நடைபெறும் - பபாசி அறிவிப்பு!
சென்னை புத்தகக் கண்காட்சியில் நடைபெற இருந்த ‘சென்னை வாசிக்கிறது’ நிகழ்ச்சி ஜனவரி 12-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என பபாசி அறிவித்துள்ளது.
புகழ்பெற்ற சென்னை புத்தக கண்காட்சியின் 47வது புத்தக திருவிழா கடந்த 3-ம் தேதி துவங்கியது. இந்த கண்காட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் அறிமுகமாகியுள்ளன. ஜன. 21-ம் தேதி வரை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள இப்புத்தகக்காட்சியை விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இப்புத்தகக் கண்காட்சியினை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக இன்று (ஜன 8) காலை 9 மணி முதல் புத்தகக்கண்காட்சி வளாகத்தில் ‘சென்னை வாசிக்கிறது’ என்னும் நிகழ்வு நடைபெறும் என பபாசி நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் இன்று பெய்த கனமழையால் புத்தக கண்காட்சி இன்று நடைபெறவில்லை என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜனவரி 12-ம் தேதி ‘சென்னை வாசிக்கிறது’ நிகழ்வு நடைபெற உள்ளதாக பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “47வது சென்னைப் புத்தகக் காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 3-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முகமாக ஜனவரி 12-ம் தேதி காலை 10 மணிக்கு புத்தகக் காட்சி அமைந்துள்ள வளாகத்தில் 4000 பள்ளி / கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் சென்னை வாசிக்கிறது என்ற நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்வை செய்தி சேகரித்து வெளியிடுமாறு ஊடகவியலாளர்களை கேட்டுக் கொள்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.