சென்னை புத்தகக் காட்சியில் ‘சென்னை வாசிக்கிறது’ நிகழ்ச்சி!
சென்னை புத்தகக் காட்சியில் "சென்னை வாசிக்கிறது" என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட வாசிப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
புகழ்பெற்ற சென்னை புத்தகக் காட்சியின் 47வது புத்தக திருவிழா கடந்த 3-ம் தேதி துவங்கியது. இந்த கண்காட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் அறிமுகமாகியுள்ளன. ஜன. 21-ம் தேதி வரை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள இப்புத்தகக்காட்சியை விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்துவது வழக்கம். அது போல் இந்த ஆண்டும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக ஜன 8-ம் தேதி காலை 9 மணி முதல் புத்தகக்கண்காட்சி வளாகத்தில் ‘சென்னை வாசிக்கிறது’ என்னும் நிகழ்வு நடைபெறும் என பபாசி நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் கனமழையால் புத்தக கண்காட்சி அன்று நடைபெறவில்லை.
இந்த நிலையில் "சென்னை வாசிக்கிறது" என்ற நிகழ்வு இன்று (ஜன.12) நடைபெற்றது. இதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் ஒப்புதல் பெற்று முதன்மை கல்வி அலுவலரிடம் தெரிவித்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மட்டுமின்றி கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் எந்தவித கட்டுப்பாடும் இன்றி கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படியுங்கள்: KPY பாலா சார்பில் இலவச ஆட்டோ சேவை தொடக்கம்!
மேலும், இதில் மாணவர்கள் வாசிக்கும் புத்தகங்கள் அவர்களுக்கே கொடுக்கப்பட்டன. இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகை ரோகிணி, நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புத்தங்களை வாசித்ததன் மூலம் வாசிக்கும் பழக்கத்தின் நன்மையை உணர்ந்து, வரும் நாட்களில் அதை கடைபிடிக்க உள்ளதாகவும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.