For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Chennai | “படிப்படியாக மழை அதிகரித்து 15, 16-ம் தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்” - தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பேட்டி!

06:43 PM Oct 13, 2024 IST | Web Editor
 chennai   “படிப்படியாக மழை அதிகரித்து 15  16 ம் தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்”   தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பேட்டி
Advertisement

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரித்து 15, 16-ம் தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“24 மணி நேரத்தில் வட தமிழகத்தின் பெரும்பான்மையான இடங்களிலும், தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் கனமழை பெய்துள்ளது. 7 இடங்களில் மிக கனமழையும், 29 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 16 செமீ மழை பதிவாகியுள்ளது. தற்பொழுது கிழக்கு - மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது.

நாளை தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து 15, 16ம் தேதிகளில் வட தமிழகம், புதுவை, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலை கொள்ளும். இதன் காரணமாக அடுத்துவரும் 5 தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மழை நீடிக்கும். அடுத்து 24 மணி நேரத்தில் தஞ்சை, திருவாரூர், மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை அதேபோல், தர்மபுரி, ஈரோடு, சேலம், நீலகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

14 ம் தேதி விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுவை, காரைக்காலில் ஒரு இடங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

15ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் ஓரிரிடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 16ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

17ம் தேதி ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முதல் விட்டு விட்டு மழை பெய்யும். நாளை முதல் படிப்படியாக மழை அதிகரித்து 15, 16-ம் தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை இன்று முதல் 15-ம் தேதி வரை தமிழக கடலோர பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் வீசக்கூடும். 16, 17-ம் தேதிகளில் வட தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் சுரைக்காற்று வீச கூடும். தென்மேற்கு பருவமழையானது விலகிக் கொண்டிருக்கிறது. 15 -16-ம் தேதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளது” இவ்வாறு தெரிவித்தார்.

https://twitter.com/ChennaiRmc/status/1845450742380830810/photo/2

தொடர்ந்து, பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதா என்ற கேள்விக்கு, “வழக்கமாக வடகிழக்கு பருவமழையின் இயல்பு தேதி அக்டோபர் 20. ஏழு நாட்கள் முன்பு அல்லது பின்பு தொடங்கினால் இயல்பு என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழக அரசுக்கு தொடர்ந்து தகவல்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து தகவல் தொடர்பில் இருக்கிறோம். தினசரி வானிலை தகவல், மீனவர்களுக்கான எச்சரிக்கை, 3 மணி நேரம் எச்சரிக்கை என அனைத்து தகவல்களையும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகளுக்கு கொடுத்து கொண்டு இருக்கிறோம்” என தெரிவித்தார்.

மதுரையில் திடீரென்று 16 செமீ மழை பெய்து பாதிப்பு ஏற்பட்டது தொடர்பான கேள்விக்கு, “மாவட்டங்களை நாங்கள் குறிக்கிறோம். ஆனால், சரியாக இந்த இடத்தில் என சொல்லிவிட முடியாது. வானிலை நிகழ்வுகள் பல காரணங்களால் நிகழ்கிறது. ஒவ்வொரு வினாடியும் பல மாற்றங்கள் நிகழும்” இவ்வாறு தெரிவித்தார்.

பருவமழையின் போது எவ்வளவு செமீ மழை பெய்யும், முன்கூட்டியே கணிக்க முடியவில்லை என்றால் மற்றொரு தூத்துக்குடி பாதிப்பு போன்று ஆகிவிடாதா? என்ற கேள்விக்கு, “கனமழை, மிக கனமழை, அதி கனமழை என்பதை தான் சொல்ல முடியும். எத்தனை செ.மீ மழை பெய்யும் என கணிக்க முடியாது. அந்த அளவிற்கு இன்னும் அறிவியல் வளரவில்லை“ என பதில்” இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.