மெட்ரோ ரயில் கட்டுமான பணிவிபத்து - உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு!
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4-வது வழித்தடம் முக்கியமானதாகும். இந்த வழித் தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்டப் பாதையாகவும் அமைகிறது.
பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 26.1 கி.மீ. தொலைவின் ஒரு பகுதியான, பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான ரயில்பாதை முதற்கட்டமாக இந்த ஆண்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்நிலையில் நேற்று சென்னை போரூர் டி.எல்.எப் - எல்&டி அருகே மெட்ரோ ரெயில் பணியின்போது இரண்டு மெட்ரோ தூண்களுக்கு இடையே தண்டவாள டிராக் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த தூண்கள் விழுந்ததில் இடையில் ஒருவர் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், திட்டத்தின் பொறுப்பாளர் நரேந்திர கிருஷ்ணா, திட்ட மேலாளர் டாடா ராவ் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த ரமேஷ் என்பவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் நிறுவனம் ரூ.5 லட்சமும், எல் அண்ட் டி நிறுவனம் ரூ.20 லட்சமும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.