சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை எப்போது?
சென்னை எழும்பூா் - நாகா்கோவில், மதுரை - பெங்களூரு இடையே ‘வந்தே பாரத்’ ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் ரயில் பயணிகளின் நலன் கருதி, நவீன வசதிகளுடன் அதிவேகமாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை – கோவை, சென்னை – பெங்களூரு, சென்னை – நாகா்கோவில் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னை-நாகா்கோவில், மதுரை- பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவைகள் வரும் செப்டம்பா் மாதம் தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "சென்னை - நாகா்கோவில், மதுரை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்குவதற்கான அனைத்து வசதிகளுடன் தயாா் நிலையில் உள்ளன. ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம்.
தற்போது ராமேஸ்வரம் புதிய பாம்பன் பாலப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், அதன் திறப்பு விழாவை வரும் செப்டம்பா் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி நேரில் வந்து தொடங்கிவைக்கவுள்ளதால், இதனுடன் சோ்த்து புதிய வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்புகள் வெளியாகும்" என்று தெரிவித்தனா்.