தீபாவளி பர்சேஸுக்காக குவிந்த பொதுமக்கள் - சென்னை தியாகராய நகரில் காவல் ஆணையாளர் நேரில் ஆய்வு!
சென்னை தியாகராய நகரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பெருநகர சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தீபாவளி பண்டிகை நெருங்குவதை அடுத்து புத்தாடைகள் வாங்க சென்னை தியாகராய நகரில் பொதுமக்கள் குவிய தொடங்கியுள்ளதால், அப்பகுதி எங்கும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த நிலையில், தியாகராய நகர் ரங்கநாதன் தெரு பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
முன்னதாக, சென்னை R1 மாம்பலம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பட்டு அறையை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, C-1 பூக்கடை காவல் நிலையம் அருகே NSC போஸ் ரோடு பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பார்வையிட்டார்.
இதையும் படியுங்கள்;டெல்லியில் வாகன கட்டுப்பாட்டு விதி திடீர் ஒத்திவைப்பு!
ஆய்வின் போது காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
தியாகராய நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு கண்காணிப்பு கோபுரங்கள் இல்லாத இடத்தில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், சீருடை அணியாத போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தியாகராய நகர், பகுதியில் 4 ட்ரோன் கேமராவும் பூக்கடை பகுதியில் 3 ட்ரோன்
கேமராவும் புரசைவாக்கம் பகுதியில் 2 ட்ரோன் கேமராவும் பாதுகாப்பு பணிக்காக
பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல்
இருப்பதால் போக்குவரத்து சார்பில் மாற்று பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நீதிமன்றம் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்க
வேண்டும்.
பின்னர், கொத்தவால் சாவடியில் வீரபத்திரர் சாமி தேவஸ்தானத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, சந்திப் ராய் ரத்தோர் கூறியதாவது,
பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உள்நோக்கம் எதுவும் இல்லை, இருப்பினும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்தான முழு விபரம் செய்தியாளர் குறிப்பில் வெளியிடப்படும் என்று பதில் அளித்தார்.