சென்னைக்கு 3 நாட்கள் கனமழை எச்சரிக்கை - கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!
ரிப்பன் மாளிகையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து ஆய்வு செய்தார்.
வடகிழக்குப் பருவமழை நாளை மறுநாள் முதல் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழையின் அளவு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழகத்தில் மழையின் அளவு அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நாளை முதல் சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக நாளையும் நாளை மறுநாளும் சென்னையில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவே சென்னையில் மழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்க பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கினால் உடனடியாக அவற்றை வெளியேற்றவும் மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது மழை நீர் தேங்கும் பகுதிகளில் இருந்து அவற்றை வெளியேற்றுவதற்கான வழிவகைகள் என்ன என்பது குறித்தும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மாநாகராட்சி ஆணையர், மேயர், துணை மேயர் உள்பட அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
பருவமழை காலத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னையில் கொட்டிய கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறின. இதனால் திமுக அரசு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழையை எதிர்கொள்ள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.