"எதையும் சமாளிக்கும் வகையில் சென்னை தயார் நிலையில் உள்ளது" - முதலமைச்சர் #MKStalin பேட்டி
எதையும் எதிர்கொண்டு சமாளிக்கும் வகையில் சென்னை தயார் நிலையில் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சால் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில் சென்னை கொளத்தூர் தொகுதியில் கனமழை பாதிப்புகள் குறித்தும், நிவாரண பணிகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.1) ஆய்வு மேற்கொண்டார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதி மழையால் பாதிக்கப்பட்டு என்பது குறித்தும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் செய்யப்பட்டுள்ள நிவாரணப் பணிகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அவசரகால செயல்பாட்டு மையத்தில் மேற்கொண்ட ஆய்விற்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
"சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் 21 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக உள்ளது. கணேசபுர சுரங்கப்பாதையில் ரயில்வே மேம்பாட்டு பணி நடைபெற்று வரும் நிலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 32 முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் 1018 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு இன்று 9 லட்சத்து 10 ஆயிரம் உணவுப் பொட்டணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
386 அம்மா உணவகங்கள் மூலமாக ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 47 பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 22,000 பேர் மழைக்கால மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றும் பணியில் 2,149 களப்பணியார்கள் மேற்கொண்டு வருகின்றனர். எதையும் எதிர்கொண்டு சமாளிக்கும் வகையில் சென்னை தயார் நிலையில் உள்ளது. கொளத்தூரில் கடந்த காலங்களில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் தற்போது எங்கும் மழைநீர் தேங்கவில்லை. இதனை மக்களே தெரிவித்தனர். மற்ற மாவட்டங்களின் நிலையை அதிகாரிகள் மூலம் அறிந்து கொண்டுள்ளேன்.
விழுப்புரத்தில் மயிலம் பகுதியில் 49 செ.மீ, நெம்மேலியில் 46 செ.மீ., வாணூர் பகுதியில் 41 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. விழுப்புரம், கடலூர் பகுதிகளில் மீட்பு, நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த 2 மாவட்டங்களிலும் உள்ள 26 முகாம்களில் 1373 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சியில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள நிலையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறுவுறுத்தியுள்ளேன்"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.