#ChennaiRains | நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை… அதிகபட்சமாக மழை பதிவு எங்கே?
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் தற்போது வரை கனமழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும். இவை தொடர்ந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டில் வரும் 17ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நள்ளிரவு முதல் சென்னையின் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. ஆலந்தூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், அடையாறு, திருவான்மியூர், கோடம்பாக்கம், சூளைமேடு, அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, ஆவடி, ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை விடிய விடிய பெய்துவருகிறது.
இதையும் படியுங்கள் : “லைட்டர் உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு தடை விதித்த மத்திய அரசுக்கு நன்றி..” - முதலமைச்சர் #MKStalin பதிவு!
குறிப்பாக வடபழனி, மீனம்பாக்கம், அடையாறில் காலை 4 மணி வரை 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வேளச்சேரியில் 5.5 செ.மீ, மற்றும் பாலவாக்கம், ராயப்பேட்டை, அண்ணா நகரில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் பகுதியில் 10 செ.மீ., மழை பெய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் அதிகபட்சமாக மணலியில் 8 சென்டிமீட்டர் என்ற அளவில் கனமழை பெய்துள்ளது.