சென்னை | கடலில் 64 நாட்கள் தத்தளித்த மியான்மரை சேர்ந்தவர் - பத்திரமாக மீட்ட காசிமேடு மீனவர்கள்!
கடலில் 64 நாட்களாக தத்தளித்தவரை காசிமேட்டை சேர்ந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டு காவல்துறையில் ஒப்படைத்தனர்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து வினோத் என்பவருக்கு சொந்தமான படகில் 7 மீனவர்கள் அதிகாலையில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் சென்றபோது, அங்கே மூங்கிலால் ஆன படகு ஒன்று மிதந்து வந்துள்ளது. அதில் ஒருவர் சைகை காட்டி கொடியசைத்துள்ளார். உடனே விசைப்படகு ஓட்டுனர் அருகில் சென்று பார்த்தபோது கையெடுத்து கும்பிட்டு காப்பாற்றுமாறும், தான் 64 நாட்கள் கடலில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உடனே மீனவர்கள் அவரை மீட்டு காசிமேடு துறைமுகத்திற்கு வந்தனர். இதனையடுத்து மீனவர்கள் அவரை காசிமேடு துறைமுகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் விசாரணையில் அவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஷன் மாமா என தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் கடலோர காவல்படையினரிடம் அவரை ஒப்படைத்தனர்.