For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“சென்னை இஎஸ்ஐ மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்!” - மாநிலங்களவையில் கனிமொழி சோமு வலியுறுத்தல்!

06:26 PM Aug 01, 2024 IST | Web Editor
“சென்னை இஎஸ்ஐ மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் ”   மாநிலங்களவையில் கனிமொழி சோமு வலியுறுத்தல்
Advertisement

சென்னையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் எம்.பி கனிமொழி சோமு வலியுறுத்தியுள்ளார். 

Advertisement

மாநிலங்களவையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு விவாதத்தில் திமுக எம்பி கனிமொழி சோமு பேசியதாவது:

சென்னை கே.கே. நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சென்னை நகரில் உள்ள பல லட்சக்கணக்கான மக்களுக்கு மருத்துவ சேவை அளித்து வரும் முக்கியமான மருத்துவமனை ஆகும். 250 படுக்கைகளுடன் 1979 ம் வருடம் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை 1991 வரை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது.

இந்நிலையில், இந்த மருத்துவமனையை டெல்லியை தலைமை இடமாகக் கொண்ட மாநில காப்பீட்டுக் கழகம் 1991ம் வருடம் கையகப்படுத்தி இப்போது வரை நடத்தி வருகிறது.

தற்போது நேரடியாகவும், சென்னையின் பிற பகுதிகளில் உள்ள பதினைந்துக்கும் மேற்பட்ட இ.எஸ்.ஐ. மருந்தகங்கள் மூலமாகவும் தினசரி பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு பல்நோக்கு சிகிச்சை அளிக்கும் மையமாகத் திகழ்கிறது. இதன் மூலம் மருத்துவக் காப்பீடு செய்துகொண்ட சுமார் ஐந்து லட்சம் பேர் பயனடைகிறார்கள்.

இதுதவிர, சென்னை நகரில் நாளுக்கு நாள் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே பல்வேறு துறைகளில் கூடுதல் மருத்துவ நிபுணர்களை நியமிக்க வேண்டும். மருத்துவம் சாராத ஊழியர்களையும் போதுமான அளவுக்கு நியமித்து அடுத்த கட்டத்துக்கு இந்த மருத்துவமனையை நகர்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இதன் இன்னொரு முக்கிய கட்டமாக இம்மருத்துவமனையின் படுக்கைகளின் எண்ணிக்கையை 1200 ஆக உயர்த்தி இதய சிகிச்சைக்கும், புற்று நோய் சிகிச்சைக்கும் தனியாக பிரிவுகளை நவீன மயமாக உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இதன் மூலம் சென்னை மண்டலத்தில் உள்ள பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புடன் கூடிய சுகாதார வசதி பெறுவதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்” என கனிமொழி பேசியுள்ளார்.

Tags :
Advertisement