#ChennaiRain | தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.1,000 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய #DyCM உதயநிதி ஸ்டாலின்!
பருவ மழையின் போது பணியாற்றிய தூய்மைப்பணியாளர்களுக்கு சிற்றுண்டி மற்றும் ரூ.1000 ஊக்கத் தொகையுடன் அத்தியாவசிய பொருட்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் தொடங்கிய கனமழை நேற்று இன்று வரை தொடர்ந்தது. இதனிடையே, மழை தொடர்பாக முன்னேற்பாடுகளை கண்காணிப்பதற்காக பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், ராயப்பேட்டை ஜானி ஜான் கான் சாலை, ஜி.பி.சாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். மழைக்கான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, நேற்று (அக். 15) காலை சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யானைகவுனி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். வடசென்னை பகுதியான யானைக்கவுனி பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள மழைநீர் வெளியேற்றும் நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு மற்றும் அதிகாரிகள் இருந்தனர். பின்னர் பேசின் பிரிஜ் பகுதியிலும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் மழை, வெள்ள மீட்புப் பணி, கால்வாய் சீரமைப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு பணிகளுக்கு இடையே, தூய்மைப்பணியாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் அருந்தி உரையாடினார்.
இந்நிலையில், மழையின் போது பணியாற்றிய தூய்மைப்பணியாளர்களுக்கு சிற்றுண்டி மற்றும் ரூ.1000 ஊக்கத் தொகையுடன் அத்தியாவசிய பொருட்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கி சிறப்பித்தார். அப்போது தயாநிதி மாறன் எம்.பி. உடனிருந்தார்.