For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை மாநகராட்சி மண்டலங்கள் 20ஆக உயர்வு!

சென்னை மாநகராட்சியின் மண்டலங்களின் எண்ணிக்கையை 15-லிருந்து 20ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 
09:25 PM Mar 01, 2025 IST | Web Editor
சென்னை மாநகராட்சி மண்டலங்கள் 20ஆக உயர்வு
Advertisement

சென்னை மாநகராட்சியின் மண்டலங்களின் எண்ணிக்கை 20ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

Advertisement

2011ஆம் ஆண்டு பெருநகர சென்னை மாநகராட்சியுடன் 42 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டு, 426 சதுர கிலோ மீட்டர் பரப்புடன் அதன் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. பெருநகர சென்னை மாநகராட்சியின் மக்கள்தொகை 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 66.72 இலட்சம் மற்றும் தற்போதைய மக்கள்தொகை சுமார் 85 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியானது தற்போது 15 மண்டலங்களில் 200 வார்டுகளை கொண்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைகளுக்குள் சட்டப்பேரவையின் 22 தொகுதிகள் உள்ளடங்கியுள்ள நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலத்தின் நிருவாக எல்லைகளும், சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லைகளும் தற்போது ஒருசேர அமையவில்லை.

இதன் காரணமாக, பல்வேறு நிர்வாக சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்களுக்குட்பட்ட நிர்வாக பகுதிகளை தற்போதைய மக்கள் தொகை, வாக்காளர் பட்டியல், சாலை பட்டியல், சாலை அடர்த்தி மற்றும் வரி மதிப்பீடுகள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சியின் நிர்வாக எல்லைகளை மாற்றியமைப்பதென அரசு முடிவு செய்துள்ளது.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் இப்பொருண்மை தொடர்பான அறிவிப்பினை 07.04.2022 அன்று சட்டப்பேரவையில் வெளியிட்டார். பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்களுக்கிடையே தற்போது மக்கள்தொகை, மக்கள்தொகை அடர்த்தி மற்றும் பரப்பளவு ஆகியன ஒரே சீராக அமையவில்லை. எல்லை விரிவாக்கத்திற்கு முன்னதான மாநகராட்சியின் மையப்பகுதிகள் அடங்கிய மண்டலங்களில் மக்கள்தொகை மற்றும் மக்கள்தொகை அடர்த்தி அதிக அளவில் உள்ளது போன்ற நிலையில் மண்டலங்களுக்கிடையே மனிதவளம் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை ஒரே சீராக பகிர்ந்தளிப்பதில் (Equitable Distribution) கடுமையான சவால்கள் எதிர்நோக்கப்படுகிறது.

இதன் காரணமாக, பல்வேறு மண்டலங்களில் குறிப்பாக மக்கள்தொகை மற்றும் மக்கள்தொகை அடர்த்தி அதிகமுள்ள மண்டலங்களில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சேவைகளை பொதுமக்களுக்கு வழங்குவதில் கடும் நிருவாக இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மண்டலங்களுக்கிடையேயான மக்கள்தொகை மற்றும் மக்கள்தொகை அடர்த்தி தொடர்பான பரவலான வேறுபாடுகளின் காரணமாக எதிர்கொள்ளப்பட்டு வரும் சவால்கள், மாநகரின் தொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள்தொகை தற்போது சுமார் 85 இலட்சத்தைக் கடந்துள்ள நிலையில் மேலும் கடுமையாகி உள்ளது.

எனவே 426 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்துள்ள பெருநகர சென்னை மாநகரின் அனைத்து பகுதி மக்களுக்கும் மாநகராட்சியால் வழங்கப்படும் சாலைகள், ஆற்றல்மிகு தெரு விளக்குகள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் சேவைகள் முழுமையான வகையிலும், மேலும் திறம்பட்ட முறையிலும் வழங்கப்படுவதற்கு ஏதுவாக பெருநகர சென்னை மாநகராட்சியின் தற்போதைய மண்டலங்களின் நிர்வாகப் பகுதிகளை சீரமைத்து மண்டலங்களின் எண்ணிக்கையை 15-லிருந்து, 20-ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

இந்திய அளவில், மிக வேகமாக நகரமயமாகிவரும் பெருநகரங்களில் பெருநகர சென்னை மாநகரம் முதன்மை நிலையில் இருந்து வருகிறது. உலகத் தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகள், சிறந்த கல்வி மற்றும் மருத்துவ வசதிகள், சுற்றுலா, கணினி மென்பொருள் உள்ளிட்ட உயர் தொழில்நுட்பம், தயாரிப்பு தொழிற்சாலைகள் என அனைத்திலும் முதன்மை மாநகரமாக திகழ்ந்து வரும் நிலையில், பெருநகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் மாநகராட்சியால் வழங்கப்பட்டு வரும் சேவைகள் சீராக அமைந்திடவும், பெருநகரின் அனைத்து பகுதிகளின் வளர்ச்சியை உறுதி செய்திடவும், இதன் மூலம் மாநிலம் மற்றும் மாநகரின் தொழில் முதலீட்டு சூழலை (Investment Climate) மேம்படுத்திடவும், அரசின் இந்நடவடிக்கை மேலும் ஒரு முக்கிய பங்களிப்பாக அமைந்திடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement