2025-2026ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்!
சென்னை மாநகராட்சி 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர், மாநகராட்சி வளாகத்தில் உள்ள மாமன்ற அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பட்ஜெட்டை தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி 2025-26 பட்ஜெட் ரூ.5 ஆயிரத்து 145.52 கோடி மதிப்பீட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக ரூ.681 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.4464 கோடிக்கு சென்னை மாநகராட்சி பட்ஜெட் உருவாக்கப்பட்ட நிலையில், 2025-2026 நிதி ஆண்டிற்கு ரூ.5145.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி,
1. சென்னை பள்ளிகளில் போட்டி தேர்வுகள் நடத்தி பரிசுகள் வழங்க ரூ.86.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என சென்னை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. தற்காலிக உடற்கல்வி ஆசிரியர்களை பணியமர்த்த சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 2.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை பள்ளிகளில் 141 உடற்கல்வி ஆசிரியர்களை பணியமர்த்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
3. பெருநகர சென்னை மாநகராட்சியில் அனைத்து மயான பூமிகளிலுள்ள தகன மேடைகளுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க ஏதுவாக ஜெனரேட்டர்கள் நிறுவப்படும். மேலும் இவற்றிற்குத் தேவையான எரிபொருள் கொள்முதல் செய்வதுடன் தொடர் பராமரிப்பும் மேற்கொள்ளப்படும். இதற்காக பட்ஜெட்டில் 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
4. முதியோர்களின் நலன் பேணும் வகையில் முதற்கட்டமாக வடக்கு வட்டாரத்தில் பி.ஆர்.என் கார்டன், மத்திய வட்டாரத்தில் செம்பியம் மற்றும் தெற்கு வட்டாரத்தில் துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா மையத்திற்கு ரூபாய் 30 லட்சம் வீதம் 3 மையத்திற்கு முதியோர்களுக்கென தனிப் பிரிவு புதியதாக தொடங்கப்படும். இப்பிரிவில் ஒரு மருத்துவ ஆலோசகர் ஒரு இயன்முறை சிகிச்சை நிபுணர் மற்றும் இரண்டு உதவியாளர்கள் பணியாற்றுவார்கள்.
5. சென்னை மாநகராட்சியில் அனைத்து சுகாதார நிலையங்களில் உள்ள மருந்து காப்பக அறைகளின் அளவுக்கு ஏற்ற வகையில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் குளிரூட்டு (AC) வசதிகள் செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
6. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சென்னை மாநகராட்சியில், புதியதாக கட்டப்பட்டுள்ள 22 மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் மின்தூக்கி (Lift) வசதிகள் செய்யப்படும். இதற்காக சென்னை பட்ஜெட்டில் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
7. சென்னை மாநகராட்சி நுழைவாயில்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் 10 இடங்களைத் தேர்வு செய்து, அங்கு மின் ஒளியுடன் கூடிய செயற்கை நீருற்றுகள் அமைக்கப்படும். இதற்காக சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
8. 2025-2026 ஆம் நிதியாண்டு முதல் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூபாய் 50 லட்சத்திலிருந்து ரூபாய் 60 லட்சமாக உயர்த்தப்படும் என மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
9. 2025-2026 ஆம் நிதியாண்டு முதல் சென்னை மாநகராட்சி மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி ரூபாய் 3 கோடியிலிருந்து ரூபாய் 4 கோடியாக உயர்த்தப்படுகிறது.
10. சென்னை மாநகராட்சியில் குப்பை கொட்டும் இடங்களில் உள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதை கண்காணித்திட கூடுதலாக 400 எண்ணிக்கையிலான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். இதற்கு 1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
11. சென்னையில் பல்வேறு இடங்களில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மின்னணு அறிவிப்புப் பலகைகளைத் தொடர்ந்து தனியார் கூட்டாண்மை முறையில் ரூபாய் 9 கோடி முதலீட்டிலும், சென்னை மாநகராட்சியின் நிதியிலிருந்து ரூபாய் 6 கோடி செலவினத்திலும் கூடுதலாக 100 எண்ணிக்கையிலான மின்னணு அறிவிப்புப் பலகைகள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு செய்திகள், அரசு விளம்பரங்கள், மற்றும் தனியார் விளம்பரங்கள் ஆகியன இடம்பெறச் செய்து அதன் வாயிலாக கூடுதல் வருவாய் ஈட்டப்படும்.
12. மேம்பாலங்கள் மற்றும் இரயில்வே மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியினை அழகுபடுத்திட சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ரூபாய் 42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
13. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி (மண்டலம் 2 வார்டு 21), IOCL (மண்டலம் 4 வார்டு 38), டோல்கேட் (மண்டலம் 4 வார்டு 39 மற்றும் சாலிகிராமம் (மண்டலம் 10 வார்டு 128) ஆகிய நான்கு இடங்களில் அமைந்துள்ள பேருந்து முனையங்கள் மேம்படுத்தப்படும். இதற்காக 16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
14. பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை விரைவாகவும் எளிதாகவும் வழங்குவதற்கு வாட்ஸ்அப் (WhatsApp) அடிப்படையிலான தகவல் தொடர்புகள் உருவாக்கப்படும். இதற்கு 4.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
15. சென்னை மாநகராட்சி பூங்காக்களுக்கு நடைபயிற்சி மற்றும் பொழுதுபோக்கிற்காக வரும் பொதுமக்களுக்காக, பூங்காக்களில் சுய உதவிக் குழுக்களால் தரமான மற்றும் சுகாதாரமான உணவு மையங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.