சென்னை | காய்ச்சலுக்கு மெடிக்கலில் ஊசி போட்டதால் கல்லூரி மாணவர் உயிரிழப்பு!
சென்னையில் காய்ச்சலுக்கு மெடிக்கலில் ஊசி போட்டதால் கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த சேலையூர் சந்திரன் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சந்தோஷ் (19). சந்தோஷ் கௌரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 22-ம் தேதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவரது தாயார் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள மருத்துவரை பார்க்க அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அப்போது கிளினிக் மூடப்பட்டிருந்ததால் அருகில் இருந்த மருந்து கடையில் கேட்ட பொழுது அங்கிருந்த பெண் சந்தோஷை பரிசோதித்து விட்டு ஊசி போட்டதாக கூறப்படுகிறது. மறுநாள் சந்தோசிற்க்கு உடலில் வீக்கம் ஏற்பட்டது அதன் பிறகு உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைத்து பெற்றோர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து பெற்றோர்கள் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே சந்தோஷ் மரணத்திற்கு மெடிக்கல் ஷாப் தான் காரணம் எனக்கூறி அவரது நண்பர்கள் மெடிக்கல் ஷாப்பை அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்போடு மருந்து கடை மூடப்பட்டது.