சென்னை | மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு... விபரீதத்தில் முடிந்த விளையாட்டு!
சென்னை கொடுங்கையூர் எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதியினருக்கு சூர்யா (வயது 11) என்ற மகன் இருந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு தங்கராஜ் மற்றும் அவரது மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து, ரேவதி சென்னையில் பட்டாளம் அஷ்டபுஜம் ரோடு பகுதியில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு சென்று விட்டார். தனது மகன் சூர்யாவையும் உடன் அழைத்துச் சென்றார்.
இந்த நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் சிறுவன் சூர்யா மற்றும் அவரது தாயார் ரேவதி இருவரும் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். சிறுவன் சூர்யா டேபிள் ஃபேன் அருகில் படுத்துக்கொண்டு தன்னிடமிருந்த சேப்டி பின்னை (ஊக்கு) வைத்து ஃபேனில் குத்தி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சூர்யா சுயநினைவை இழந்து மயக்கமடைந்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாயார், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆட்டோ மூலம் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் சென்றார். சிறுவனை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 11 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த புளியந்தோப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.