சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு!
சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில், கடந்தாண்டு டிசம்பர் 23ம் தேதி இரவு, அதே பல்கலையில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதனையடுத்து மாணவியின் புகாரின் அடிப்படையில், பல்கலை வளாகத்திலேயே நடந்த பாலியல் வன்முறை தொடர்பாக, கோட்டூர்புரம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் (37) என்பவரை கைது செய்தனர்.
தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடம்பெற்ற சிறப்பு குழு அமைக்கப்பட்டு விரிவான விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஞானசேகரன் ஈடுபட்டது தெரியவந்தது.
விசாரணையை முடித்த சிறப்பு புலனாய்வு குழு, ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.