‘சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெயில் கொளுத்தும்’ - வெளியான அப்டேட்!
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசத் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து கோடைக்காலம் தொடங்கிய நிலையில் மே மாதம் முழுவதும் வெப்ப அலைவீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதனையடுத்து நேற்று முன்தினம் (மே 25) மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியது. இந்த ரிமல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நேற்று இரவு புயல் கரையை கடந்தது. இந்நிலையில் மீண்டும் வெப்ப அலை வீசக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதீப் ஜான்,
“சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 108 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும். மேலும், ராணிப்பேட்டை, வேலூரின் சில பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும்.
தமிழகத்தின் பிற பகுதிகளில் வெப்ப அலை இருக்காது. கன்னியாகுமரியில் நினைத்த அளவு மழை பெய்ய வாய்ப்பில்லை” எனத் தெரிவித்துள்ளார்.