“சென்னைக்கும் எனக்கும் மிக நெருக்கமான தொடர்பு உள்ளது” - முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பெருமிதம்!
சென்னைக்கும் தனக்கும் மிக நெருக்கமான தொடர்பு உள்ளதாகவும், தமிழக மக்களின் கலாச்சாரம், பண்பாடு, நெறிமுறை தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் 75வது பிறந்த நாள் விழா மற்றும் 50 ஆண்டு காலமாக நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவை பணியை கொண்டாடும் விதமாக நேற்று (ஜூலை 20) சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், கரு.நாகராஜன், நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக மூத்த தலைவர்கள் எச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதிஸ், நமிதா உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும், பாடகி எஸ்.பி.சைலஜா, நடிகர் விஷால், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, பத்ம விபூஷன் வைஜெயந்தி மாலா உள்ளிட்டோரும் கலந்துகொண்டு வெங்கையா நாயுடுவுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
இந்த பாராட்டு விழா மேடையில் பேசிய முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, “பாராட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிறந்தநாள் விழாக்களை கொண்டாடுவதில் எனக்கு பழக்கம் இல்லை. ஒரு பெரிய புயலுக்கு 4 நாட்களுக்கு முன்தினம் பிறந்தவன் நான் என எனது பாட்டி கூறுவார். நண்பர்களுக்காக மட்டுமே இந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டேன்.
எனக்கும் சென்னைக்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு உண்டு. தமிழக மக்களின் கலாச்சாரம், பண்பாடு, நெறிமுறை மிகவும் பிடிக்கும். இளம் வயதில் மாணவர் தலைவராக எனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினேன். என்னுடைய இத்தகைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ஆர்எஸ்எஸ் இயக்கம் தான். நான் 14வது வயதில் ஆர்எஸ்எஸ்-ல் இணைந்தேன். அதனால் தான், நான் தலைமைத்துவ பண்பை கற்றுக் கொண்டேன். எனக்கு அரசியல் குருவாக அடல் பிகாரி வாஜ்பாய் விளங்கினார்.
ஆரம்ப காலத்திலேயே அடல் பிகாரி வாஜ்பாய் ஒரு மேடையில் நான் குடியரசு தலைவராக வருவேன் என கூறினார். அவர் கூறியது போலவே நடந்தது. எனது தாயின் ஆசை போல வழக்கறிஞராக பணியாற்றினேன். அதற்கு பிறகு கட்சியில் இணைந்தேன். கட்சி என்னை வழிநடத்தி இத்தகைய இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இந்த இடம் சாதாரணமாக கிடைக்கவில்லை. கடின உழைப்பு, விடாமுயற்சி, குறிக்கோள், நேர்மைத்தன்மை தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.
இன்றைய இளைஞர்கள் குறிக்கோளுடன் நேர்மை தன்மையாக வளர்ச்சியை நோக்கி செயல்பட வேண்டும். அப்போதுதான் வெற்றியை பெற முடியும். இந்தியா இப்போது உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு பெரிய வளர்ச்சி அடைந்த நாடாக மாறிக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணமாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மோடியின் ஆட்சியில் இந்திய மக்களின் வாழ்க்கைத் தரமே உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியா இப்போது வளர்ச்சி அடைந்த 5வது பொருளாதாரம் நாடக இருக்கிறது. விரைவில் மூன்றாவது பொருளாதார வளர்ச்சியடைந்த நாடாக மாறும்” இவ்வாறு முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.