For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை: மதுபோதையில் சாலையில் உறங்கிய இளைஞர் மீது காரை ஏற்றி விபத்து - காரை இயக்கிய பெண்களை தேடும் காவல்துறை!

09:29 AM Jun 18, 2024 IST | Web Editor
சென்னை  மதுபோதையில் சாலையில் உறங்கிய இளைஞர் மீது காரை ஏற்றி விபத்து   காரை இயக்கிய பெண்களை தேடும் காவல்துறை
Advertisement

சென்னையில் மதுபோதையில் சாலையில் படுத்து உறங்கிய இளைஞர் மீது காரை ஏற்றி விபத்து ஏற்படுத்திய பெண்களை தேடும் பணியில்,  பெசன்ட் நகர் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

சென்னை பெசன்ட் நகர் ஓடக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சூர்யா (22), பெயிண்டராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் பெசன்ட் நகர் காலாக்ஷேத்ரா காலனி வரதராஜ் சாலை நடைபாதை அருகே மது போதையில் படுத்து உறங்கியுள்ளார்.

அப்போது அவ்வழியாக சென்ற கார் சாலை ஓரம் மது போதையில் விழுந்து கிடந்த சூர்யாவின் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் சூர்யாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். பின்னர் சில மணி நேரத்திற்குள் சிகிச்சை பலனின்றி சூர்யா உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய காரில் இரு பெண்கள் வந்துள்ளனர். அதில் காரை இயக்கிய பெண் சம்பவ இடத்திலிருந்து காருடன் தப்பி ஓடியுள்ளார். உடன் அமர்ந்திருந்த பெண் விபத்து குறித்து கேள்வி எழுப்பிய பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மேலும் காரில் வந்த இரு பெண்களும் மது போதையில் இருந்ததாக உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உயிரிழந்த சூர்யாவின் உறவினர்கள் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பெசன்ட் நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.  தப்பி ஓடியவர்களை பிடித்து சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்துள்ளனர். 

இந்நிலையில், விபத்து நடைபெற்று 10 மணி நேரத்தை கடந்த நிலையில் சிசிடிவி காட்சிகள், கார் பதிவெண் மற்றும் தப்பியோடிய பெண்களின் புகைப்படம் ஆகிய ஆதாரங்கள் இருந்தும் அவர்களை ஏன் கைது செய்யவில்லை என உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் பெசன்ட் நகர் காவல் நிலையத்தை நேற்று நள்ளிரவு முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் காவல்துறை உயர் அதிகாரிகள் உயிரிழந்தவரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கை விடப்பட்டது.

Tags :
Advertisement