அரை நூற்றாண்டு கடந்தும் தீர்க்கப்படாத செண்பகவல்லி அணைக்கட்டு பிரச்னை - நீர்வளத்துறை பதில்..!
அரை நூற்றாண்டுகளாக செண்பகவல்லி அணைக்கட்டில் ஏற்பட்ட உடைப்பு சரிசெய்யப்படாமல் இருந்து வரும் நிலையில், முதலமைச்சருக்கு ஒருவர் எழுதிய மனுவிற்கு நீர்வளத்துறை பதிலளித்துள்ளது. இது தொடர்பான பிரத்யேக செய்தியை விரிவாகக் காணலாம்...
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் செண்பகவல்லி அணை அமைந்துள்ளது. சுமார் 5,000 அடி உயரத்தில் உள்ள இந்த அணையின் ஒரு பகுதி தண்ணீர், முல்லைப்பெரியாறு அணைக்கும், மற்றொரு பகுதி தண்ணீர் தமிழ்நாடு எல்லைக்கும் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்பகுதியில் உள்ள காட்டாற்று வெள்ளம், பள்ளமான கேரளப் பகுதிக்குள் செல்வதைத் தடுத்து, தமிழ்நாடு எல்லைக்குள் திருப்பி விடுவதற்காக செண்பகவல்லி அணை கட்டப்பட்டது. 1967 ஆம் ஆண்டு ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தால் அணையில் உடைப்பு ஏற்பட்டது. சுமார் 56 வருடங்களாகியும் உடைப்பு சரிசெய்யப்படாததால், கேரள வனப்பகுதிகளில் உள்ள 40,000 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படுகின்றன.
செண்பகவல்லி அணைக்கட்டை மையமாக வைத்து அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொண்டு வந்தபோதிலும், அரை நூற்றாண்டு பிரச்னைக்கு தீர்வு எட்டப்படவில்லை. வாக்குகளை பெறுவதற்கு மட்டும் செண்பகவல்லி அணைக்கட்டு பிரச்னையை அரசியல் கட்சிகள் கையில் எடுப்பதாக குற்றம்சாட்டியுள்ள விவசாயிகள், கூட்டணியில் உள்ள இரு மாநிலக் கட்சிகளும் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : “எண்ணூரில் வாயுக்கசிவு நிறுத்தம்; பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை..!” - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
செண்பகவல்லி அணைக்கட்டில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்வது தொடர்பாக வாசுதேவநல்லூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கோரிக்கை மனு ஒன்றை முதலமைச்சருக்கு அனுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள நீர்வளத்துறை, “இரு மாநில பிரச்னை, நதிநீர் பங்கீட்டு பிரச்னை என்பதால், அரசு மட்டத்தில் முடிவெடுக்கப்பட வேண்டிய ஒன்று என்றும், காவிரி நதிநீர் பங்கீட்டு தொழில்நுட்பக் குழுவின் தலைவர் மூலம் செண்பகவல்லி அணைக்கட்டு உடைப்பை சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளது.