“சானிட்டரி பேட்களில் ரசாயனங்கள்?”... கனிமொழியின் கேள்விக்கு மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல் பதில்!
திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரிடம் நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.
“சுற்றுச் சூழல் தன்னார்வ தொண்டு நிறுவனமான டாக்ஸிக்ஸ் லிங்க் வெளியிட்ட 'மாதவிடாய் கழிவுகள் 2022' என்ற அறிக்கையில், சானிட்டரி பேட்களின் மாதிரிகளில் பித்தலேட்டுகள் மற்றும் ஆவியாகும் கரிம சேர்மங்கள் இருப்பது கண்டறியப்பட்டிருப்பது குறித்து அரசுக்குத் தெரியுமா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? நாட்டில் சானிட்டரி பேட்களில் ரசாயன உள்ளடக்கம் கலப்பதற்கான அனுமதிக்கப்பட்ட வரம்பு குறித்து ஏதேனும் தெளிவான விதிமுறைகள் உள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன?
இந்த சானிட்டரி பேட்களின் உற்பத்தியாளர்களுக்கு நச்சு இரசாயனங்களுக்கான கட்டாய சோதனை மற்றும் நிறுவனங்கள் பேக்கேஜிங்கில் மூலப்பொருள் பட்டியலை வெளியிட வேண்டிய தேவை உள்ளிட்ட கடுமையான விதிமுறைகளை அரசாங்கம் பரிசீலித்து வருகிறதா? ஏனெனில் இந்த தயாரிப்புகள் தற்போது 'மருத்துவப் பொருட்கள்' என வகைப்படுத்தப்படுவதால் அத்தகைய லேபிளிங்கில் இருந்து விலக்கு அளிக்கக்கப்பட்டுள்ளன.
பித்தலேட்டுகள் மற்றும் ஆவியாகும் கரிம சேர்மங்கள் போன்ற இரசாயனங்களுடன் தொடர்புடைய சுகாதார அபாயங்களைக் கருத்தில் கொண்டு, சுகாதாரப் பொருட்களின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட, எடுக்க முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் என்ன?" ஆகிய கேள்விகளை கனிமொழி கருணாநிதி எழுப்பியிருந்தார்.
இவற்றுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் அனுப்ரியா படேல் பதிலளிக்கையில், “10-19 வயதுக்குட்பட்ட இளம் பெண்களிடையே மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும்... சுகாதார நாப்கின்களை பயன்படுத்துவதையும் அதிகரிக்கவும், சுற்றுச்சூழல் ரீதியாக நாப்கின்களை பாதுகாப்பாக பயன்படுத்தவும், பாதுகாப்பாக அகற்றவும் இந்திய அரசு மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துகிறது.
இளம் பருவப் பெண்களை உள்ளடக்கிய இந்தத் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. தேசிய சுகாதாரத் திட்டத்தால் மாநில திட்ட அமலாக்கம் (PIP) மூலமாக இத்திட்டத்துக்கு உதவி செய்யப்படுகிறது. பாதுகாப்பான மாதவிடாய் சுகாதார நடைமுறைகளைப் பராமரிக்க பொருத்தமான தரத் தரநிலைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய மாநிலங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தரநிலைகள் பணியகம் (BIS), சுகாதார நாப்கின்கள் குறித்த இந்திய தரநிலைகளை (IS 5405:2019) சுகாதார நாப்கின்கள் விவரக்குறிப்பு மற்றும் (IS 17514:2021) மீண்டும் பயன்படுத்தக்கூடிய சுகாதார நாப்கின்/சானிட்டரி நாப்கின்/பீரியட் பேண்டீஸ் விவரக்குறிப்பு என வெளியிட்டுள்ளது. இந்த தரநிலைகளில் பொதுவான தோல் நோய்க்கிருமிகளுக்கான சுகாதார சோதனை, சுகாதார நாப்கின்களில் பித்தலேட் சோதனை மற்றும் இறுதி தயாரிப்பு பயன்பாட்டிற்கு பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்த சைட்டோடாக்ஸிசிட்டி, எரிச்சல் மற்றும் தோல் உணர்திறன் சோதனைகளை உள்ளடக்கிய உயிர் இணக்கத்தன்மை மதிப்பீடு ஆகியவை அடங்கும்.
இது மட்டுமல்லாமல் ஜவுளி அமைச்சகம், மேற்குறிப்பிட்ட இந்திய தர நிலைகளை அக்டோபர் 01, 2024 முதல் கட்டாயமாக்குவதற்காக, BIS சட்டம், 2016 இன் பிரிவு 16 இன் கீழ் தரக் கட்டுப்பாட்டு உத்தரவை (QCO) பிறப்பித்துள்ளது” என மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.