முழு கொள்ளளவை எட்டும் செம்பரம்பாக்கம் ஏரி | கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
தொடர் மழை பெய்து வரும் நிலையில் 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி அணையின் நீர்மட்டம் 22.35 அடி நிரம்பி உள்ளது.
சென்னைக்கு குடிநீா் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீா் வரத்தை தரும் நீா் ஆதாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்வதாலும், ஏற்கெனவே ஏரி 75 சதவீதம் நிரம்பியிருந்ததாலும், ஏரியின் நீா்மட்டம் கடந்த சில நாள்களாக உயா்ந்து வருகிறது. 24 அடி நீா் தேக்கும் திறன் கொண்ட இந்த ஏரியில் செவ்வாய்க்கிழமை நீா்மட்டம் 23 அடியை நெருங்கும் நிலையில் இருந்தது. இதனால், நேற்றுமுதல் 200 கனஅடி உபரி நீா் அடையாற்றில் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், மழை மேலும் நீடிப்பதால் ஏரிக்கு விநாடிக்கு 514 கனஅடியாக நீா்வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில் 3,210 கனஅடிக்கு நிரம்பியுள்ளது.
இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் இருந்து புதன்கிழமை காலை 9 மணிமுதல் விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் குன்றத்தூா், திருமுடிவாக்கம், திருநீா்மலை, கே.கே.நகா், சைதாப்பேட்டை, கோட்டூா்புரம் உள்ளிட்ட இடங்களில் அடையாற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.