சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வெள்ளப்பெருக்கு - 20 பக்தர்கள் பத்திரமாக மீட்பு!
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் வெள்ளப்பெருக்கில் சிக்கி இருந்த நிலையில், 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதையும் படியுங்கள் : எண்ணூர் கடலில் எண்ணெய் கசிவுக்கு காரணம் என்ன? – சிபிசிஎல் விளக்கம்!
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் தொடர்ந்து விடிய விடிய பெய்து வரும் கனமழையின் காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு நேற்று (டிச.17) ஏராளமான பக்தர்கள் சென்றனர். இக்கோயில் அடிவாரத்துக்கு சென்ற 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஓடையை கடக்க முடியாமல் தவித்தனர்.
அதனை தொடர்ந்து, இன்று தீயணைப்புத் துறையினர் மற்றும் ஆயுதப்படை காவலர்கள், வனத்துறையினர் இணைந்து கயிறு கட்டி சுமர் 20 பக்தர்களை பத்திரமாக மீட்டனர். மேலும் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரி மலைப் பகுதியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.