பராமரிப்பு பணிகளுக்காக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!
பராமரிப்பு பணிகளுக்காக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ விம்கோ நகர் நிலையத்தில் திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (பிப்.22) இரவு 10 மணி முதல் நாளை மறுநாள்(பிப்.23) காலை 6 மணி வரை, நீல வழித்தடத்தில் உள்ள விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையத்திற்கு மட்டும் மெட்ரோ ரயில்கள் சேவை நிறுத்தப்படுகிறது. இதன் விளைவாக, நீல வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் சேவைகள் விமான நிலையம் முதல் விம்கோ நகர் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.
பிப்.22 (சனிக்கிழமை)
காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை விமான நிலையம் முதல் சுங்கசாவடி வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும். இரவு 9 மணியில் இருந்து 10 மணிவரை 7 நிமிடம் இடைவெளிவிட்டு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். தொடர்ந்து இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
அதேபோல் விமான நிலைத்தியத்தில் இருந்து விம்கோ நகர் வரை நேரடியாக செல்லும் மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வழக்கமாக இயக்கப்படும். குறிப்பாக இரவு 9 மணியில் இருந்து 10 மணிவரை 14 நிமிடம் இடைவெளிவிட்டு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். தொடர்ந்து இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
பிப்.23 (ஞாயிற்றுக்கிழமை)
விமான நிலையம் முதல் சுங்கசாவடி மற்றும் விமான நிலைத்தியத்தில் இருந்து விம்கோ நகர் வரை நேரடியாக செல்லும் மெட்ரோ ரயில்கள் காலை 6 மணியில் இருந்து இரவு 11 மணி வரை வழக்கம்போல் இயக்கப்படும். குறிப்பாக காலை 5 மணி முதல் 6 மணி வரை விமான நிலையம் முதல் சுங்கசாவடி வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
விமான நிலைத்தியத்தில் இருந்து விம்கோ நகர் வரை நேரடியாக செல்லும் மெட்ரோ ரயில்கள் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.