"மாறி.. மாறி.. மழை அடிக்க..மனசுக்குள்ள குடை பிடிக்க.." - 6மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப் போகும் மழை!
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 27ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என்றும், இருப்பினும் ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.