"ரத்தன் டாடாவுக்கும் தனக்குமான நட்பு" | முதன்முறையாக மனம் திறந்தார் #N.Chandrasekaran!
ரத்தன் டாடாவை போல் உலகில் யாரும் இல்லை என டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரபல தொழிலதிபர்களில் ஒருவரும், டாடா குழுமத்தின் தலைவராக இருந்தவருமான ரத்தன் டாடா கடந்த அக். 9ம் தேதி காலமானார். இவரின் மறைவு அவரது குடும்பத்தை மட்டுமின்றி உலக மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து, ரத்தன் டாடாவின் மறைவுக்கு பின்னர் டாடா அறக்கட்டளையின் தலைவராக, அவரது இளைய சகோதரர் நோயல் டாடா தெரிவாகியுள்ளார். இந்நிலையில், தற்போது டாடா குழுமத்தின் தலைவராக இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த என்.சந்திரசேகரன், ரத்தன் டாடாவுடனான நட்பு குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
ரத்தன் டாடாவை சந்திக்கும் அனைவருக்கும் அவரது மனிதாபிமானம், அரவணைப்பு மற்றும் நாட்டுக்கான அவரது கனவுகள் பற்றிய தெரிந்திருக்கும். இந்த உலகில் ரத்தன் டாடாவை போல் யாரும் இல்லை.
டாடா உடனான நட்பு பல ஆண்டுகளாக இருந்தது. எங்களது நட்பு தொழில் மற்றும் வணிகத்தை தாண்டி தனிப்பட்ட நட்பாக மாறியது. எங்களது உரையாடல் வணிகத்தை தாண்டி, அன்றாட வாழ்க்கை முறை பற்றியும் அமையும். அவருடனான பல இனிமையான நிகழ்வுகள் நினைவிருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கும் ஊழியர் சங்கத்துக்கும் இடையே 2 ஆண்டுகளாக ஊதியம் தொடர்பாக தகராறு ஏற்பட்டிருந்த நிலையில் , டாடா குழுமத்தின் தலைவராக நான் பொறுப்பேற்றேன். இது தொடர்பாக டாடாவும் நானும் தொழிற்சங்கத் தலைவர்களை ஒன்றாகச் சந்தித்தோம். சந்திப்பின் போது, டாடா 3 தகவல்கள் தெரிவித்தார். தீர்வைக் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார். மேலும், நிறுவனம் கஷ்டத்தை கடந்து வருவதாகவும், இந்த தகராறு ஒரு 15 நாட்களுக்குள் முடிவுக்கு வரும் என்று உறுதியளித்தார். டாடாவின் முக்கிய நோக்கம், ஊழியர்களை நன்கு கவனித்துக்கொள்வதை உறுதி செய்வது, ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனை உறுதி செய்வது தான்.
பின்னர், எங்கள் தலைமையகமான பாம்பே ஹவுஸைப் புதுப்பிக்க வேண்டும் என்று நான் டாடாவிடம் தெரிவித்தேன். 1924-ம் ஆண்டிலிருந்து பாம்பே ஹவுஸ் புதுப்பிக்கப்படவில்லை. ஆனால், டாடாவிற்கு பாம்பே ஹவுஸை புதுப்பிப்பதில் விருப்பமில்லை. "பாம்பே ஹவுஸ் ஒரு கோயில்". புதிப்பித்தால் அதன் புனிதத் தன்மை அழிந்துவிடும் என்று அவர் என்னிடம் தெரிவித்தார். மீண்டும் நான் இதைபற்றி அவரிடம் கூறினேன். அப்போது டாடா என்னிடம், ‘புதுப்பிக்க’ என்று சொன்னால், ‘காலி’ என்று அர்த்தமா?” என்று கேள்வி எழுப்பினார்.
அனைவரையும் அருகிலுள்ள அலுவலகத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளோம் என்று அவரிடம் தெரிவித்தேன். பின்னர், "நாய்கள் எங்கே போகும்?" என்று டாடா என்னிடம் கேட்டார். அலுவலகத்தின் வரவேற்பறையில் நாய்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யலாம் அல்லது நாய்களுக்கு குடில் தயார் செய்வோம் என தெரிவித்தேன். இதையடுத்து, பாம்பே ஹவுஸைப் புதுப்பிக்க ஒப்புக்கொண்ட டாடா முதலில் நாய்களுக்கான குடில்களை பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார். அதனை வடிவமைப்பை கண்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவரது மகிழ்ச்சி நாங்கள் சரியானதைச் செய்தோம் என்பதை உறுதிப்படுத்தியது"
இவ்வாறு டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் பதிவிட்டுள்ளார்.