For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பூமியை விட அதிக நீர் கொண்ட இளம் கிரகம் உருவாக வாய்ப்பு - ஆச்சரியத்தில் வானிலை ஆய்வாளர்கள்!

06:50 PM Mar 01, 2024 IST | Web Editor
பூமியை விட அதிக நீர் கொண்ட இளம் கிரகம் உருவாக வாய்ப்பு   ஆச்சரியத்தில் வானிலை ஆய்வாளர்கள்
Advertisement

பூமியைவிட 3 மடங்கு நீர் கொண்ட புதிய கிரகத்துக்கான வாய்ப்பை வானியல் அறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளனர். பூமி உள்ளிட்ட கோள்கள் எப்படி உருவாகி இருக்கும் என்ற கேள்விக்கு பதில் கிடைக்க ஒரு வாய்ப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

Advertisement

பூமியைப் போன்றே உயிர்கள் வாழ வாய்ப்புள்ள, இன்னொரு கிரகத்தை அடையாளம் காண்பது வானிலை ஆய்வாளர்களின் முக்கியபணி. அத்துடன் நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள் எவ்வாறு உருவாகின போன்ற பல கேள்விகளும், அதற்கு ஆதாரத்துடனும், ஆதாரங்கள் இல்லாத கோட்பாடுகளும் நிறைய உள்ளன. இதுபோன்ற அனைத்து கேள்விகளுக்கும் அண்மையில் ஆய்வு ஒன்று பதில் தர முன்வந்தது.

அதன்படி, பூமியில் இருந்து சுமார் 450 ஒளியாண்டுகள் தொலைவில், இளம் நட்சத்திரம் ஒன்று மற்றும் அதனைச் சுற்றி கிரகங்கள் உருவாவதற்கான வாய்ப்பையும், இத்தாலியின் மிலன் பல்கலைக்கழகத்தின் வானியலாளர் ஸ்டெபானோ ஃபச்சினி தலைமையிலான ஆய்வுக்குழுவினர் கண்டறிந்துள்ளனர். சுமார் 1 லட்சம் ஆண்டுகள் வயதே இருக்கும் இளம் நட்சத்திரத்துக்கு ஹெச்.எல்.டவுரி என பெயரிட்டுள்ளனர்.

இந்த நட்சத்திரத்தை சுற்றி கிரகத்தின் தோற்றத்துக்கு அடிப்படையான வட்டுகளும், அதில் நீருக்கான நீராவியும் கண்டறியப்பட்டுள்ளன. இளம் நட்சத்திரம், அதைச் சுற்றிய கோள்களின் உருவாக்கத்துக்கான வாய்ப்புகள், வட்டுகளில் பொதிந்துள்ள நீர் அளவு போன்றவை ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பூமியின் பெருங்கடல்களில் நிறைந்திருக்கும் நீரைவிட, 3.7 மடங்கு அதிகம் நீர் அங்கு உள்ளது.

வட்டுகளின் நீராவியும் அதனைச் சூழ்ந்துள்ள தூசுக்கள், புதிய கோள் ஒன்றின் உருவாக்கத்தை காட்டுகின்றன. இது பூமி உள்ளிட்ட கோள்கள் எவ்வாறு தோன்றியிருக்கக்கூடும் என்ற கடந்த காலத்துக்கான சாளரமாக அமைந்துள்ளது. இளம் நட்சத்திரமான ஹெச்.எல்.டவுரி மற்றும் அதனைச் சுற்றிய வட்டுக்கள் குறித்தான ஆய்வின் ஊடே பூமியின் ஆதி தோற்றம் குறித்தும் அறிந்துகொள்ள தற்போது வாய்ப்பாகியுள்ளது.

வானியலாளர் ஸ்டெபானோ ஃபச்சினி தலைமையிலான ஆய்வுக்குழு 'நேச்சர் அஸ்ட்ரானமி’ என்னும் இதழில் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. சூரியக் குடும்பத்தில் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வை, பிரபஞ்சத்தின் இன்னொரு மூலையில் இளம் நட்சத்திரமும், அதனைச் சுற்றிய கோள்களின் உருவாக்கமும் நகலெடுத்தவாறு தோற்றம் தந்திருப்பது, வானியல் ஆய்வாளர்களை புதிய உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளன.

Tags :
Advertisement