5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்!
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்:
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, நீலகிரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ஈரோடு மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு நாள்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.